முன்னணி நடிகையான தமன்னா, ஒரு நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, பாகுபலி படத்திற்குப் பிறகு தேசிய அளவில் புகழைப் பெற்றார். பெண்மையைக் கொண்டுசெல்லும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் இவர், தற்போது பான் இந்தியா திரைப்படமான “ஓடிலா”வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பாலிவுட் படங்களில் தொடர்ந்து தனது நிலையை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியில் இருக்கிறார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தமன்னா, நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு நடிகையின் பயோபிக்கில் நடிக்க நீங்கள் ஆர்வமாக உள்ளீர்களா? என்கின்ற கேள்விக்கு, “நிச்சயமாக, நான் ஸ்ரீதேவியாக நடிக்க விரும்புகிறேன். அவர் ஒரு சூப்பர் ஐகான். எப்போதும் அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்” என்று தமன்னா ஐஏஎன்எஸ் பேட்டியில் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது அம்மாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க வேண்டுமென்றால், அதற்கு 100 வருடங்கள் ஆனாலும் முடியாது என்று கூறியிருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர், “மாம்” படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, குஷி கபூர் தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஷியின் நடிப்பில் உருவான “லவ்யாப்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு, போனி கபூர் இதனை உறுதிப்படுத்தினார். இதற்கு முன்பு, “தி ஆர்க்கீஸ்”, “லவ்யாப்” மற்றும் சமீபத்தில் வெளியான “நதானியன்” ஆகிய படங்களில் குஷி கபூர் நடித்திருந்தார். இந்நிலையில், ஸ்ரீதேவியின் பயோபிக்கில் அவர் நடிப்பாரா? அல்லது வேறு நடிகை தேர்வு செய்யப்படுவாரா? என்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.