
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தை இயக்குனர் எச். வினோத் இயக்கி வருகிறார். விஜயின் கடைசி திரைப்படமாக இது உருவாகும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்க, முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு, டிஜே அருணாச்சலம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை KVN Productions நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
அரசியல் களத்திற்குத் தயாராகும் விஜய்
ஜனநாயகன் திரைப்படத்திற்குப் பிறகு, விஜய் அரசியலில் முழுமையாக செயல்பட இருக்கிறார். இவரது தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி, அடுத்த 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற கட்சியின் இரண்டாம் ஆண்டு விழாவும், அரசியலுக்கு அவர் முனைப்புடன் தயாராகி வருவதை உறுதி செய்துள்ளது. இதனால், ஜனநாயகன் தான் விஜயின் கடைசி திரைப்படம் என்பதும் உறுதியாகியிருக்கிறது.
படத்தின் முக்கிய அப்டேட் – கேமியோ ரோலில் மூன்று டாப் இயக்குனர்கள்!
ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படம் தீபாவளி 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இயக்குனர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் ஆகியோர் பத்திரிகையாளர்களாக கேமியோ ரோலில் நடிக்கவுள்ளனர். இது ரசிகர்களுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜயின் திரைப்பயணத்தில் இவர்கள் மூவரும் முக்கியமான பங்கு வகித்துள்ளதால், இவர்களின் பங்கேற்பு படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
விஜய்க்காக இயக்குனர்கள் இணையும் தருணம்!
அட்லீ, லோகேஷ், நெல்சன் – இவர்களில் ஒருவர் விஜயுடன் மெர்சல், பிகில் ஆகிய படங்களில், மற்றொருவர் லியோ, மாஸ்டர் படங்களில், மேலும் ஒருவர் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளனர். தற்போது விஜயின் கடைசி படத்தில் இவர்கள் மூவரும் கேமியோ ரோலில் தோன்ற இருப்பது, ரசிகர்களுக்கு ஒரு விசேஷ துவசமாக அமைய உள்ளது. மேலும், இவர்களும் விஜயுடன் நெருக்கமான உறவைப் பகிர்ந்துகொள்வதால், சம்பளமே இல்லாமல் இப்படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனநாயகன் – ஒரு பிரம்மாண்ட அரசியல் திரில்லர்!
இந்த படம் அரசியல் சாயல் கொண்ட திரில்லராக உருவாகிறது. விஜய் இதில் அரசியல் பேச்சாளராக பொது மக்களிடம் வலுவான கருத்துகளை முன்வைக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் அரசியல், சமூக கருத்துகள், விஜயின் அரசியல் பயணம் ஆகியவற்றைப் பற்றிய பரபரப்பான விவாதங்களை கிளப்பி வருகிறது.

இப்போது அனைவரும் ஜனநாயகன் திரைப்படம் எப்படி இருக்கும்?, அட்லீ, லோகேஷ், நெல்சன் ஆகியோரின் காட்சிகள் எப்படி அமைந்திருக்கும்? என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். இந்த படம் விஜயின் கடைசி திரைப்படமாக வெளியாக இருப்பதால், ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்!